அரசு பள்ளி அறைகளை பூட்டி பொதுமக்கள் முற்றுகை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி, பள்ளி அறைகளை பொதுமக்கள் பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆரம்ப பள்ளி கட்டிடம் உள்ளது. அந்த பள்ளி வளாகத்திலேயே உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகிறது. இப்பள்ளிகளில், 240 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு போதிய இடம் இல்லாமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலையில் உள்ளது.மேலும், இப்பள்ளி பழைய கட்டிடங்களில் இயங்குவதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அருகில் புதிதாக அரசு பள்ளிக்கு ஒதுக்கிய இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேற்று மாலை கிராம மக்கள், அரசு பள்ளியின் அருகே திரண்டனர். அங்கு, பள்ளியின் அறைகளை பூட்டி, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பள்ளி அறைகளை பொதுமக்கள் திறந்து விட்டனர். அனைவரும் கலைந்து சென்றனர்….

The post அரசு பள்ளி அறைகளை பூட்டி பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: