அமைச்சர் பதவிநீக்கம், உருவபொம்பை எரிப்பு, மகா பஞ்சாயத்து… உ.பி-யை மையம் கொண்டது விவசாயிகள் போராட்டம்: உளவுத்துறை எச்சரிக்கையால் யோகி அரசுக்கு நெருக்கடி

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்த விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளதால், சட்டஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி சம்பவ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக ஐக்கிய கிசான் மோர்ச்சா சார்பில் நாளை உயிரிழந்த நான்கு விவசாயிகளின் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள், பிராத்தனை கூட்டங்கள், மெழுகுவர்த்தி ஊர்வலம் ஆகியன நடத்தப்படுகின்றன. லக்கிம்பூர் கேரி தவிர மற்ற மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சிகளை மேற்கொள்ள விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. மேலும், இன்றுக்குள் (அக். 11) அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்கம் செய்யப்படாவிட்டால், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தியை, நாட்டின் முக்கிய நதிகளில் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.வரும் 15ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் உருவபொம்மைகளை எரிக்க ஐக்கிய கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாய அமைப்புகள் தற்போது உத்தரபிரதேசத்தில் தங்களது போராட்ட களத்திற்கான இடமாக மாற்றியுள்ளன. இன்று தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளதால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடையும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக நேற்று மாதம் முதல்வர்  யோகி ஆதித்யநாத்தின் முகாம் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும், உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இருபது மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு, பதற்றமான பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன. விவசாயிகள் அமைப்புக்களின் நெருக்கடியை தொடர்ந்து போலீஸ் தலைமையகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரியில் தொடங்கிய போராட்டம் பூர்வாஞ்சல் வரை பரவும் அபாயத்தில் உள்ளது. வரும் 26ம் தேதி லக்னோவில் கிசான் மகாபஞ்சாயத்தை நடத்த ஐக்கிய கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லக்கிம்பூர் கேரி சம்பவம் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது….

The post அமைச்சர் பதவிநீக்கம், உருவபொம்பை எரிப்பு, மகா பஞ்சாயத்து… உ.பி-யை மையம் கொண்டது விவசாயிகள் போராட்டம்: உளவுத்துறை எச்சரிக்கையால் யோகி அரசுக்கு நெருக்கடி appeared first on Dinakaran.

Related Stories: