சென்னை, ஏப்.14: திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் உள்ள அதிமுகவின் கடல் தாய் அம்மா நற்பணி மன்றம் என்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் மத்திய சென்னை பாஜ வேட்பாளர் வினோஜ் செல்வம் மற்றும் பாஜவினர் அத்துமீறி நுழைந்து நிகழ்ச்சி நடத்தி இருப்பதாகவும் இதுகுறித்து கேட்ட அதிமுகவினரையும் மிரட்டியதாகவும் அதிமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சென்னை கலங்கரை விளக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், அதிமுகவின் நற்பணி மன்ற கட்டிடத்தில் அத்துமீறி நிகழ்ச்சி நடத்திய பாஜ வேட்பாளர் வினோஜ் செல்வம், பாஜ நிர்வாகிகள் பி.டி.சிவாஜி மற்றும் நடுக்குப்பம் இளையராஜா மற்றும் உடனிருந்த பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் ஆதிராஜாராம் கூறியதாவது: எங்களுடைய கூட்டணி கட்சி வேட்பாளருக்காக நேற்றைய தினம் காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெற்று கட்சி தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திருட்டுத்தனமாக பாஜவினுடைய மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் நடுகுப்பத்தில் இருக்கக்கூடிய கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து அவருடைய கட்சி விழாவை நடத்தி இருக்கிறார். இதை கேட்ட அதிமுகவினரை பாஜவினர் மிரட்டி இருக்கின்றனர். எனவே நாங்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறோம் நடவடிக்கை எடுப்போம் என இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார்.
பல இடங்களில் நுழைந்து அத்துமீறி பிரச்னைகளை பாஜவினர் உருவாக்குகின்றனர். மத்திய சென்னையில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் தேர்தலை நிறுத்துவதற்கு பாஜ சதி செய்கிறது. இந்த செயல்பாடுகள் கலவரத்திற்கு வழி வகுக்கும் என திட்டமிட்டு சதி செய்கிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டு புகார் கொடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகளை குறிவைத்து அங்கு பிரச்னைகளை உருவாக்கி சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்த பாஜ சதி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று மத்திய சென்னை ஆக இருக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு எழுந்துள்ளது. தவறு செய்துவிட்டு யோக்கியர்கள் மாதிரி பேசி வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் சூழலை உருவாக்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக மன்ற கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்த பாஜ வேட்பாளர் : காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.