சென்னை: பெங்களூருவில் இருக்கும் ஒரு ஆசிரமத்துக்கு சென்றிருந்த ரஜினிகாந்த், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு: எங்கு பார்த்தாலும் பசுமை, ஏரி, மக்கள் என்று, அந்த ஆசிரமத்தை பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது. மக்களின் முகத்தில் புன்னகை தெரிந்தது. யானை, குதிரைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பசுக்கள் இருந்தன. அதில் ஒரு குதிரையின் பெயர் ‘ரஜினி’. அந்த ஆசிரமத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் தங்கலாம் என்று திட்டமிட்டு வந்தேன்.
ஆனால், கடைசியில் 15 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டேன். அப்போது குரு என்னிடம், ஆசிரமத்தை சுற்றிப் பார்க்கிறீர்களா என்று கேட்டார். அப்போது நான், மக்கள் என்னை பார்த்ததும் சூழ்ந்துகொள்வார்கள், ஆட்டோகிராஃப் கேட்பார்கள், என்னுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்பார்கள், அதனால் ஆசிரமத்ததுக்கு சிக்கல் வரும் என்று யோசித்தேன். அங்கு இருந்த மக்கள் என்னை கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்தேன். தமிழ்நாட்டை சேர்ந்த பலரையும் அங்கு பார்த்தேன். நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தார்கள்.
ஆனால், அப்போது அங்கு இருந்த ஒருவர் கூட என்னை திரும்பி பார்க்கவில்லை. இதுதான் உண்மை. போட்டோ, ஆட்டோகிராஃப் இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள். ஒருவர் கூட என்னை பார்க்கவோ, பேசவோ இல்லை. நான் தானாகவே சென்று கை அசைத்தேன். ஆனால், யாரும் என்னை கவனிக்கவே இல்லை. நான் எத்தனையோ அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் சந்தித்திருக்கிறேன்.
ஆனால், இந்த அனுபவம் எனது ஈகோவை உடைத்து விட்டது. திரையுலக ஸ்டார்டம் என்பது வந்து போகக்கூடியது. அது சிறிது காலத்துக்கு மட்டும்தான் நிலைக்கும். ஆனால், இந்த ஆன்மிக ஸ்டார்டம்தான் உண்மையான ‘சுப்ரீம் ஸ்டார்டம்’. மரணத்துக்கு பிறகும் கூட இந்த ஸ்டார்டம் அப்படியே இருக்கும். அது வளர்ந்துகொண்டேஇருக்கும். இவ்வாறு ரஜினி கூறினார்.
