வனப்பகுதியில் அத்துமீறிய ரகுல் பிரீத்: அதிகாரிகள் விசாரணை

அகமதாபாத்: இந்தியில் கடந்த 2019ல் வெளியான ‘பதி பத்னி அவுர் வோ’ என்ற படத்தின் 2ம் பாகமான ‘பதி பத்னி அவுர் வோ 2’ என்ற படத்தில் ரகுல் பிரீத் சிங், ஆயுஷ்மான் குரானா, சாரா அலிகான் நடித்துள்ளனர். வரும் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷனுக்காக குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவுக்கு ரகுல் பிரீத் சிங் மற்றும் படக்குழுவினர் சென்றனர். அப்போது ரகுல் பிரீத் சிங் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தை விட்டு கீழே இறங்கி நடப்பது போன்ற ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானது. இது கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது.

வனவிலங்குகள் நடமாடும் பாதுகாக்கப்பட்ட பகுதியில், பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க அனுமதி கிடையாது என்ற விதிமுறை இருக்கும்போது, ரகுல் பிரீத் சிங் எவ்வாறு விதிகளை மீறலாம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.  இந்த விவகாரம் தொடர்பாக கிர் தேசிய பூங்கா அதிகாரிகள் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளனர். அதில், ‘சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ, சாசன் சரணாலயத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியே படமாக்கப்பட்டது.

வனத்துறை விதிகளின்படி, சரணாலயத்தின் எல்லைக்குள் நுழைந்த பிறகுதான் வாகனத்தை விட்டு கீழே இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரகுல் பிரீத் சிங் சரணாலயத்துக்குள் செல்வதற்கு முன்பே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் உள்ளே செல்லாமல், நுழைவு வாயில் பகுதியில் இருந்தே தனது குழுவினருடன் திரும்பி சென்றுவிட்டார். எனவே, அவர் எந்த வனத்துறை விதிகளையும் மீறவில்லை’ என்றனர்.

Related Stories: