சென்னை: உலக அளவில் அதிக வரவேற்பு பெற்ற வெப்தொடர், `மணி ஹெய்ஸ்ட்’. டி.வி தொடராக ஒளிபரப்பாகி, பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்பானிஷ் தொடரான இது வெற்றிபெற்றதால், இதன் அடுத்தடுத்த சீசன்களை நெட்பிளிக்ஸ் உருவாக்க தொடங்கியது. கடந்த 2021ல் வெளியான 5ம் சீசனுடன் இத்தொடர் நிறைவடைந்தது என்று அறிவிக்கப்பட்டது.
பிறகு இத்தொடர் கொரியா மொழியில் ‘மணி ஹெய்ஸ்ட்: கொரியா ஜாயின்ட் எக்கானமிக் ஏரியா’ என்ற பெயரில் கடந்த 2020ல் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. பிறகு ‘மணி ஹெய்ஸ்ட்’ பெர்லின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ‘மணி ஹெய்ஸ்ட் ஸ்பின்-ஆஃப்’ தொடராக ‘பெர்லின்’ வெளியானது. இதன் 2வது சீசன் வரும் 15ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு, மீண்டும் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் குறித்து பேச வைத்துள்ளது.
இதுகுறித்து நெட்பிளிக்ஸ், ‘புரட்சி இன்னும் முடியவில்லை, ‘மணி ஹெய்ஸ்ட்’ உலகம் தொடர்கிறது’ என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. ஆனால், இது ‘மணி ஹெய்ஸ்ட்’ கதையின் தொடர்ச்சியா? அல்லது அதன் முன்கதையா? அல்லது ‘பெர்லின்’ என்ற தொடரை போல் ஸ்பின்-ஆஃப் கதையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
