பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல், தமிழில் விஜய்யுடன் ‘புதிய கீதை’ என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் அவர், பாலிவுட்டில் இளம் நடிகைகள் போலியான பப்ளிசிட்டி மூலம் தங்களுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ‘பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை கொடுத்திருந்தால், உங்களை சூப்பர் ஸ்டார் என்று சொல்லுங்கள். அதுவரை, சூப்பர் ஸ்டார் என்ற விளம்பர விளையாட்டு எதுவும் வேண்டாம்.
இதுதான் கசப்பான உண்மை. திரையுலகில் தனியாக ஒரு பிளாக்பஸ்டர் படத்தை கூட கொடுக்க முடியாத நிறைய நடிகைகள், வருடத்துக்கு ஓரிரு சாதாரண படங்களில் மட்டும் நடித்துவிட்டு படப்பிடிப்பு தளங்களில் இருப்பதால், தங்களை நட்சத்திரங்கள் என்று பெருமையாக சொல்கின்றனர். ஒரு படம் கூட பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலிக்காத பல நடிகைகள், தங்களை நம்பர் ஒன் மற்றும் நம்பர் டூ என்று சொல்ல, சோஷியல் மீடியாவின் விளம்பர குழுக்களுக்கு பணம் தருகின்றனர். 2026ம் வருடத்தில் 100 கோடி ரூபாய் வசூல் கூட சாதாரணம் என்றாகி விட்டது’ என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
