கூடலூரில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப் பூக்களை பறித்து செல்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிஞ்சி செடிகள் வளர்ந்து வருகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி பூ பூப்பதால், அது சிறப்பு வாய்ந்த மலராக கருதப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடு காணி, ஓவேலி, நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

அதே சமயம் காட்டு யானைகள், சிறுத்தை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தொடர் கண்காணிப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதையடுத்து, இன்று பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மலைகள் முழுவதும் நீல நிற போர்வை போர்த்தியது போல் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கும் காட்சியை காண கூடலூர் சுற்றுவட்டார மக்கள், கேரளம், கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளும் ரசித்து வருகின்றனர்.

மேலும் குறிஞ்சிப் பூக்களை பறித்து செல்பவர்களுக்கு ரூ.25,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: