சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு எ.வ.வேலு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அவரது சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்று அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தன்மீது தொடரப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரியும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார். அதே நேரம் எ.வ.வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் தேவையில்லாதது என வாதிட்டார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்தார். எனினும் வெளிநாடு செல்வதாக இருந்தால் கீழமை நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த வழக்குத் தொடர்பாகத் தங்களது புலன் விசாரணையைத் தொடரலாம் என்றும், சம்மன் அனுப்பி வேலுவை விசாரிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
