சங்கரன்கோவிலில் சோகம் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக வாலிபர்கள், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோக சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

நாள் முழுவதும் செல்போனில் மூழ்கி கிடப்பதால் மூளையை பாதித்து மனசோர்வை உருவாக்குகிறது. படிப்பை கைவிட்டு விளையாடும் போது பெற்றோர் கண்டிப்பதால் ஏற்படும் தற்காலிக கோபம் மற்றும் அவமானம் தற்கொலைக்கு தூண்டுகிறது.

கேமிற்குள் பணம் செலவழிப்பது, கடன் தொல்லைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் மாணவர்கள், வாலிபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர் கண்டிப்பது மற்றும் இலக்குகளை அடையாத விரக்தி போன்றவையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அப்படி தான் சங்ரன்கோவில் ப்ரீ பயர் கேமுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விவரம் பின்வருமாறு:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 1ம் தெருவை சேர்ந்த சுதந்திரகுமார் மகன் மாதவன் (19). கூலி வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் விளையாட்டுகளில் ஒன்றான ‘ப்ரீ பயர்’ கேமிற்கு முழுமையாக அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. அவர் பெரும்பாலான நேரங்களில் ப்ரீ பயர் கேமிற்கு நேரம் செலவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கச்சென்ற பிறகு, மாதவன் அவரது மாடியில் தனது அறைக்கு சென்றுள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மாதவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலின் பேரில் சங்கரன் கோவில் டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாதவனின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைன் விளையாட்டு மோகம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இளைய சமுதாயத்தினர் இதுபோன்று விலைமதிப்பற்ற உயிர்களை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்வதால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மனநல மருத்துவர்கள் கூறுகையில், ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டிற்கு பள்ளி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாவது தொடர்கிறது. ஒரு வீதியில் 10 பேர் ஒன்று கூடி ஆன்லைன் விளையாட்டுகளில் பல மணி நேரம் ஈடுபட்டு தங்களை அடிமையாக்கி கொள்கின்றனர்.

இதற்கு சீசனல் அபெக்டிவ் டிஸ் ஆர்டர் என்று பெயர். ஏதாவது ஒரு விஷயத்தில் தங்களின் கவனத்தை முழுமையாக செலுத்த வைத்து மகத்தான மனித ஆற்றலை வீணடிக்கின்றன இந்த விளையாட்டுக்கள்.

எனவே குழந்தைகளை அருகேயுள்ள பூங்கா்களுக்கு அழைத்து சென்று விளையாட வைப்பது, புத்தகங்கள் படிக்க வைப்பது, யோகா மற்றும் மற்ற விளையாட்டுகளில் அவர்களது கவனத்தை திசை திருப்பலாம். மனி ஆற்றலை செல்போன் முடக்குகின்றன. எனவே செல்போன்களை அளவோடு பயன்படுத்துவது நல்லது’ என்றனர்.

Related Stories: