சென்னை: மூலக்கொத்தளம் பகுதியில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், ஓட்டேரி தலைமைச் செயலக காலனி எஸ்விஎம் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி பலி ஆடு என்கிற அஜய் (20) என்பதும், இவர் மீது தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரை சேர்ந்த திருநங்கையை பைக்கில் அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு திரும்பியபோது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் அஜய்யை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.பின்னர் அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உளள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டேரி எஸ்விஎம் நகரை சேர்ந்த அருண் என்கிற அருண்ராஜ் (27), தனுஷ் என்கிற ஸ்பேரோ (22), தமிழரசன் (29), சுனில் என்கிற சூர்யா (20), சேத்துபட்டு பகுதியைச் சேர்ந்த சிவா (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 5 பேரை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
