ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ராமநாதபுரம் நகர் போலீசார், புத்தேந்தல் ரயில்வே கேட் பகுதியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டூவீலரில் வந்த 4 பேர், போலீசாரை கண்டதும் டூவீலரை போட்டுவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து, போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர். இதில், 22 கிராம் எடை மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருளை அவர்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதன்ராஜ் (29), சிரஞ்சீவி (20), வெற்றிவேலன் (22), சீனி சாகுல்ஹமீது (22) என்பதும், விற்பனைக்காக மெத்தபெட்டமைனை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து மெத்தபெட்டமைன், டூவீலர் எடை இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
