திருவள்ளூர்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கஞ்சா பாடல் போட மறுத்ததால் டிஜே. கருவிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து இதுசம்பந்தமாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறுவானூர் கண்டிகையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவிற்காக கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் டிஜே. இசை கச்சேரியை நடத்தினார். ஒவ்வொரு பாடல்கள் போடப்பட்டு அதற்கு உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திருமண வரவேற்புக்கு நிகழ்ச்சி வந்திருந்த கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிநாதன் (23) என்பவர் திடீரென கஞ்சா பாடலை போடும்படி ஸ்ரீராமிடம் கேட்டுள்ளார். இதற்கு ஸ்ரீராம் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த மணிநாதன், அவரது நண்பர்கள் தங்கனூர் கிராமத்தை சேர்ந்த பிரபு, பொட்டு மற்றும் ஸ்ரீவெள்ளை ஆகிய 5 பேர் சேர்ந்து டிஜே. இசை கச்சேரி கருவிகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஸ்ரீராம் கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குபதிவு செய்து மணிநாதனைகைது செய்து அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இதுசம்பந்தமாகபிரபு, பொட்டு மற்றும் ஸ்ரீவெள்ளை ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
