திருமலை: தேசிய காவல் அகாடமியில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை கத்திமுனையில் மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய காவல் அகாடமி உள்ளது. இங்கு யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் ஐபிஎஸ் அந்தஸ்து பெற்ற ஆண், பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு பயிற்சி பெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், அதே அகாடமியில் பயிற்சி பெறும் ஒரு ஆண் ஐபிஎஸ் அதிகாரி மீது அட்டப்பூர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், இந்த அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஐபிஎஸ் அதிகாரியான உதய்கிருஷ்ணாரெட்டி எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பி துன்புறுத்தி வருகிறார். கடந்த 9ம்தேதி எனது தலைமுடியை பிடித்து, கத்தியை காண்பித்து மிரட்டி ஒரு அறையில் வலுக்கட்டாயமாக தள்ளி பூட்டினார். பின்னர் அந்த அறையில் வைத்து ஆபாசமாக வீடியோ பதிவு செய்தார். எனது செல்போனையும் பறித்துக்கொண்ட அவர், அதில் ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் எனது கணவருக்கு அனுப்புவதாக மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இப்புகாரின்பேரில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய்கிருஷ்ணாரெட்டி மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் மிக உயர்ந்த காவல்துறை பயிற்சி மையமான காவல் அகாடமியில், சக பெண் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டின்பேரில், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
