தண்டையார்பேட்டை: ஆந்திராவில் இருந்து திருடப்பட்ட மொபட்டை சென்னையில் போலீசார் மீட்டு அசாம் வாலிபரை கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே நேற்றிரவு பூக்கடை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரமணா காந்தி தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஒரு மொபட்டை மறித்து விசாரணை நடத்தியபோது அந்த வாலிபர் பதற்றத்துடன் பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே மொபட்டின் வாகன நம்பரை சோதித்து பார்த்தபோது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாகனம் என்பது தெரியவந்தது. அதில் உள்ள தொலைபேசி நம்பருக்கு போலீசார் தொடர்புகொண்டு பேசியபோது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவருடைய மொபட் நேற்று காலை 10 மணிக்கு திருட்டுப்போனதாகவும் இதுகுறித்து ஆந்திர மாநிலம் குடிபலா காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது அசாம் மாநிலத்தை சேர்ந்த பொக்கான்சன் (20) என்று தெரிந்தது. ஆந்திராவில் இருந்து மொபட்டை திருடிக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். இதையடுத்து மொபட்டுடன் வாலிபரையும் பூக்கடை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமணா காந்தி ஒப்படைத்தார். இதனிடையே மொபட்டின் உரிமையாளர் சென்னைக்கு வந்ததும் அவரிடம் வண்டியை ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
