ஈரோடு: ஈரோடு அருகே தனது மகளுக்கு 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது செய்யப்பட்டார். எடப்பாடியை சேர்ந்த பிரியதர்ஷினிக்கு பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, தன்னுடைய 2-வது பிரசவத்திற்காகத் தனது தாயின் ஊரான பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குக் கடந்த 18-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்த நிலையில், பிறந்த 14 மணி நேரத்திலேயே அந்தப் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து, குழந்தை இறந்தது குறித்துப் பிரியதர்ஷினி பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், அந்தப் பிஞ்சு குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்தன்று குழந்தையுடன் இருந்த பிரியதர்ஷினியின் தாயார் தங்கமணியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது மகளுக்கு இரண்டாவது முறையாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளதாலும், ஏற்கனவே அவளுடைய கணவர் குடிப்பழக்கத்தின் காரணமாக குடும்பத்தைக் கவனிக்காமல் பொறுப்பின்றி இருந்து வருவதாலும், 2வது பெண் குழந்தையையும் வளர்ப்பதற்குப் பிரியதர்ஷினி மிகவும் சிரமப்படுவார் என்ற சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறினார். இதன் காரணமாகவே தானே அந்தக் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகத் தங்கமணி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, பவானி காவல்துறையினர் தங்கமணியைக் கொலை வழக்கில் தற்போது கைது செய்துள்ளனர்.
