ஜனநாயகன் வெளியிடும் நாளில் அரசு விடுமுறை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அதிமுக மாஜி அமைச்சர் நக்கல்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: மின்சாரமின்றி இருளிலே தமிழகம் மூழ்கியுள்ளது. அரசு மருத்துவமனையிலே பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் அறிவிக்கப்பட்டது. செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்து ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்வதாக சொல்லப்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தாய்மாமன் திட்டம் எவ்வளவு பங்களிக்க முடியும்? பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்கம் தரும் விஜய், பெண் கல்வியை ஊக்குவித்திட திருமணத்திற்கு ஒரு பவுன் தாலிக்கு தங்கம் திட்டத்தை தந்து, ரீல்ஸ் தாய்மாமன், ரியல் தாய்மாமனாக ஆகலாமே? மாணவர் விடுதியிலே முறையாக இட்லி, தோசை, சப்பாத்தியை மீண்டும் கொடுக்க, முதல்வரே நேரடி ஆய்வு செய்யும் அளவிற்கே தவெக அரசின் நிர்வாகம் இருக்கிறது.

இந்நிலையில், கொழுந்து விட்டு எரிகிற மேகதாது புதிய அணை பிரச்னையை எப்படி தீர்ப்பார்? பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை எப்படி மீட்டெடுப்பார்? இப்படியாக வேதனையில் காலம் கடத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மகிழ்வான அறிவிப்பை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடவும், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கவும் வேண்டியுள்ளார்.

மொழிப் போராட்டத்திலே உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதைப் போல, ஜனநாயகன் பட வெளியீட்டு விழாவை திருவிழாவாகக் கொண்டாட அறிவித்துள்ள அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், அடுத்த அதிரடியாக ஜனநாயகன் படம் வெளியிடும் நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: