சென்னை: பாமகவின் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி சென்னை தி.நகரில் நேற்று வெளியிட்டார். விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் வகையிலான 226 பரிந்துரைகளுடன் 83 தலைப்புகளுடன் பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இடம்பெற்றது. அதில் முக்கிய அம்சங்களாக, வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. பின்னர் நிருபர்களுக்கு அன்புமணி அளித்த பேட்டி: கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கப்படுகிறது.
வடிவேலுவின் நகைச்சுவை பாணியில் தமிழ்நாட்டில் ஏரிகள் காணாமல் போகின்றன. தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை அமைக்க கூடாது, அமைக்க நினைத்தால் களத்தில் இறங்கி போராடுவோம். மலேசியா, தாய்லாந்து நாட்டில் இருந்து கூட மணல் எடுத்து வாருங்கள், ஆற்றில் மணல் அள்ள கூடாது. ஆற்றுப் பகுதியில் மணல் குவாரிக்கு திட்டமிடப்பட்ட இடத்தில் எல்லாம் தடுப்பணை கட்டுங்கள். எம்- சாண்ட் போன்றவை இருக்கும்பொழுது மணல் ஏன் ஆற்றில் இருந்து எடுக்கப்பட வேண்டும்? கேரள மாநிலம் ஆற்று மணல் அள்ள அனுமதிப்பதில்லை, அந்த உணர்வு தமிழக அரசுக்கு ஏன் இல்லை? இவ்வாறு கூறினார்.
