சென்னை: உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது.
1988ம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறிவரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
