தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

அதேநேரம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. மதுரை விமானநிலையம், மதுரை நகரம், பாளையங்கோட்டை, வேலூர் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது. இந்நிலையில், இன்று முதல் 24ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், தமிழகத்தின் ஏனைய இடங்களில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 24ம் தேதிவரை வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Related Stories: