நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராமர் கோயில் நன்கொடை திருட்டு பிரச்னையை இந்தியா கூட்டணி எழுப்பும்: ஆர்ஜேடி தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க வரும் 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலம் பக்சர் மக்களவை உறுப்பினரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவருமான சுதாகர் சிங் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை உடைப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற பாஜ நினைக்கிறது. இதனை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து எதிர்க்கும்.

எஸ்ஐஆர் நடவடிக்கை குடிமக்களின் வாக்குரிமை மீதான தாக்குதல். வாக்காளர் பட்டியலை கைப்பற்றினால், தேர்தலையே கைப்பற்றி விடலாம். இத்தகைய நடைமுறைகள் நீடித்தால், இந்தியாவின் தேர்தல்கள் சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியாவில் நடைபெறுவதை போல மாறி விடும். அங்கெல்லாம் அனைத்து வாக்குகளும் ஆளும் கட்சிக்கே சென்று விடும். இந்தியாவிலும் அவ்வாறு நடந்தால் ஜனநாயகம் என்பது ஒரு மாயையாக மட்டுமே எஞ்சி இருக்கும்.

வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜ அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை, எஸ்ஐஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவாக குரல் கொடுக்கும். மேலும், ராமர் கோயில் நிதி முறைகேடு, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்தியா கூட்டணி எழுப்பும்” என்று மக்களவை உறுப்பினர் சுதாகர் சிங் தெரிவித்தார்.

Related Stories: