வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புது கட்டுப்பாடு பெற்றோரின் எஸ்ஐஆர் விவரத்தை புதிய வாக்காளர்கள் தர வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள், தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை சமர்பிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முதல் கட்டமாக பீகாரிலும், 2ம் கட்டமாக தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களிலும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 3ம் கட்டமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாக புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை சமர்பிக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்காக படிவம் 6ல், பகுதி ஜெ மற்றும் கே ஆகிய பிரிவுகளுக்கு இடையில் உறுதிமொழி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்கள் கேட்கப்படுகின்றன. பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை தர வேண்டும். இல்லாவிட்டால் அத்தகைய விவரங்கள் இல்லை என குறிப்பிட வேண்டும். இந்த உறுதிமொழி விவரத்தை பூர்த்தி செய்யாமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது.

Related Stories: