ராமர் கோயில் தலைமை நிர்வாக அதிகாரி அதிகாரத்தை அறக்கட்டளை தீர்மானிக்கும்: கோயில் கட்டுமான குழு தலைவர் பேட்டி

அயோத்தி: அயோத்தி கோயிலின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் கோயில் அறக்கட்டளையால் தீர்மானிக்கப்படும் என்றும் இதில் அரசு தலையீடு இருக்காது என ராமர் கோயில் கட்டுமானக் குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார். ராமர் கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோலி, லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணுகாந்த் சதுர்வேதி மற்றும் என்ஐடி ராய்ப்பூரின் முன்னாள் தலைவர் சுரேஷ் ஹவாரே ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட குழுவை கடந்த 6ம் தேதி கோயில் அறக்கட்டளை அறிவித்தது.

இந்த நிலையில்,ராமர் கோயில் கட்டுமானக் குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று பேட்டியளிக்கையில் கூறியதாவது: அயோத்தி கோயிலின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியின் (சிஇஓ ) பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் கோயில் அறக்கட்டளையால் தீர்மானிக்கப்படும். அறக்கட்டளையின் மீது பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பதே தலைமைச் செயல் அதிகாரியின் முதன்மைப் பொறுப்பாக இருக்கும்.

புதிய தலைமைச் நிர்வாக அதிகாரி நிதி ஏற்பாடுகளையும் மேற்பார்வையிடுவார். மேலும், அறக்கட்டளையின் செயல்பாட்டிலோ அல்லது அதன் சிஇஓவின் செயல்பாட்டிலோ அரசுத் தலையீடு எதுவும் இருக்காது. அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்வதும், கோயிலின் மீதான அவர்களின் நம்பிக்கையைத் தக்கவைப்பதும் புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் பொறுப்புகளில் அடங்கும். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

Related Stories: