பெங்களூரு: பெலகாவியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் வருடாந்திர அகில இந்திய பிரசாரக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 10ம் தேதி தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. கூட்டத்திற்குப் பின்னர் இந்தக் கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடவடிக்கைகள், நூற்றாண்டு விழா திட்டங்கள் ஆகியவற்றை மறுஆய்வு செய்ததுடன், மக்கள்தொகை சமநிலையின்மை முதல் போதைப்பொருள் பயன்பாடு வரையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று அயோத்தி ராமர் கோவிலின் காணிக்கை முறைகேடு குறித்து அனைவரும் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.
தீர்த்த க்ஷேத்ரா நியாஸின் கோரிக்கையின் பேரில் தொடங்கப்பட்ட எஸ்.ஐ.டி விசாரணை ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டும் என்று அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர். ராமர் கோயில் மீதான அனைத்து ராம பக்தர்களின் போற்றுதலையும் ஆழமான நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் நடக்காமல் இருப்பதை கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
