30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்காமல் சஸ்பெண்ட் செய்யலாம்: ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை

புதுடெல்லி: கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர்களை பதவியில்இருந்து நீக்காமல்,சஸ்பெண்ட் செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. பிரதமர்,ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கடுமையான குற்றங்களில் கைதாகி தொடர்ந்து 30 நாள் காவலில் வைக்கப்பட்டால் 31வது நாள் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மசோதா எதிர்க்கட்சிகளால் நடத்தப்படும் அரசாங்கங்களை சீர்குலைக்கும் கருவி என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இருந்தும் எதிர்க்கட்சிகள் விலகின. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் பிரதமர்,முதல்வர்கள் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்போர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்காமல் தற்காலிக இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த குழுவின் அறிக்கை இந்த வாரம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், குறிப்பிட்ட மசோதாவில் பதவி நீக்கம் என்பதற்கு பதில் தற்காலிக இடைநீக்கம் என்ற சொல்லை பயன்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.  அதாவது, கடும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பிரதமர், அமைச்சர்கள், சட்ட நடவடிக்கைகளின் முடிவு வரும் வரை, நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்யப்படாமல், தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

மேலும் அது, கடுமையான குற்றச் செயல்கள் என்பதை வரையறுத்து, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களையே இச்சொல் குறிக்க வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளது.  இந்த பாதுகாப்பு ஏற்பாடு மறுநியமனத்தை உறுதி செய்கிறது என்றும், நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இடைநீக்கம் நிரந்தரமாவதில்லை என்றும் அந்தக் குழு கூறியுள்ளது. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உள்துறை அமைச்சகம் முன்மொழியப்பட்ட திருத்தங்களுடன் ஒன்றிய அமைச்சரவையை அணுகும்.அதன்,பின் மக்களவையில் மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

Related Stories: