நண்பர்களை வெட்டியதால் பழிக்குப்பழியாக முகம் சிதைத்து வாலிபர் கொலை: பொன்னேரியில் பயங்கரம்

பொன்னேரி: பொன்னேரியில் நண்பர்களை வெட்டியதால் பழிக்குப்பழியாக வாலிபரின் முகத்தை கத்தி மற்றும் கற்களால் சிதைத்து படுகொலை செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி, குன்னமாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவன். இவரது மகன் சுனில் (27). இவர், நேற்று இரவு ஆரணியாற்று பாலத்தின் கீழ் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள், உடனடியாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு சின்னக் காவனம் பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் தகராறு ஏற்பட்டு தீபன் (24) என்பவரின் நண்பர்களை சுனில் கத்தியால் வெட்டியுள்ளார். இதற்கு பழி தீர்ப்பதற்காக தீபன் மற்றும் அவரது நண்பர்கள் சுனிலை கொலை செய்ய திட்டம்தீட்டியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முன்விரோதத்தை மறந்து நைசாக பேசி மதுஅருந்த சுனிலை அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர், மதுபானம் வாங்கிகொடுத்து போதை தலைக்கேறியதும் சுனிலின் முகத்தை கத்தி மற்றும் கற்களால் சிதைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. வாலிபர் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில், 3 பேரை பிடித்து காவல்நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: