‘‘நிகழ்ச்சிக்கு அணிந்து செல்லவேண்டும்’’ என்று கேட்டு பெண்ணிடம் 55 பவுன் நகைகள் வாங்கி அடகு வைத்து பணம் சுருட்டிய தோழி: போலி பாசத்தால் பறிகொடுத்தார்

பெரம்பூர்: நிகழ்ச்சிக்கு அணிந்து செல்லவேண்டும் என்று பெண்ணிடம் 55 சவரன் நகைகளை வாங்கிச்சென்று அடமானம் வைத்து பணம் சுருட்டிய தோழியை கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர், சுகந்தாம்பாள் நகரை சேர்ந்தவர் பிரபாவதி (43). இவர், மகள், மகனுடன் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரது தெருவில் வசித்துவரும் ராஜேஸ்வரி என்பவர் மூலம் அவரது தங்கை தீபா என்பவர் பிரபாவதிக்கு அறிமுகமாகியிருக்கிறார். இதன்பிறகு தனது அன்பான பேச்சால் தீபா மிகவும் நெருங்கி பழகியதால் பிரபாவதியின் குடும்பத்தில் ஒருவராக மாறினார்.

இந்தநிலையில், தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என்று தீபா, கடந்த வருடம் மார்ச் மாதம் பிரபாவதியிடம் இருந்து 55 சவரன் தங்க நகைகளை இரவல் வாங்கி அணிந்து சென்றுள்ளதாக தெரிகிறது. இதன்பிறகு சில நாட்கள் கடந்தபிறகும் நகைகளை திருப்பி தரவில்லை என்றதால் பலமுறை பிரபாவதி சென்று கேட்டுள்ளார். ஆனால் நகைகளை கொடுக்காமல் ஏதேதோ காரணம் சொல்லிவந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பிரபாவதி, இதுபற்றி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். இதுசம்பந்தமாக 10வது குற்றவியல் நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘’தீபா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி, நேற்று கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சென்னை மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்த தீபா (35) கைது செய்து விசாரித்தனர்.

இதில், பிரபாவதியிடம் வாங்கிய நகைகள் அனைத்தையும் அடகு கடையில் அடமானம் வைத்து பணத்தை வாங்கி தனது தேவைக்கு பயன்படுத்தியுள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து தீபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: