செய்யாறு டாஸ்மாக் கடையில் சென்னை போலீஸ்காரரை கல்லால் தாக்கிய ரவுடி

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமம் டேங்க் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் (32). இவரது மனைவி சரஸ்வதி (29). இவர்களுக்கு கினிஷ்க் என்ற மகன் உள்ளார். அரவிந்தன் சென்னையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2ம் அணியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அரவிந்தன் கடந்த 10ம் தேதி இரவு செய்யாறு ஆற்றங்கரையோரம் உள்ள டாஸ்மாக் கடைக்கு, தனது நண்பர்கள் விஜய், பரத்ராஜ், ெஜய்சங்கர் ஆகியோருடன் பைக்கில் சென்றுள்ளார்.

அங்கு மதுபாட்டில்களை வாங்கிய அவர்கள், பின்னர் தங்களது பைக்குகளை எடுக்க வந்தனர். அப்போது பைக்கின் அருகே நின்றிருந்த 2 பேரை வழி விடும்படி அரவிந்தன் கூறியுள்ளார். இதற்கு அந்த வாலிபர்கள், நாங்கள் யார் தெரியுமா, நாங்கள் ‘ரவுடி’ எங்களையே தள்ளிப்போக கூறுகிறாயா? என ஆபாசமாக பேசியபடி அரவிந்தன் உள்பட 4 பேரையும் கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அரவிந்தனை, நண்பர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அரவிந்தன் செய்யாறு போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் உள்பட 4பேரை தாக்கியது வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்த பெயிண்டர் ராஜா என்கிற புள்ளிமான் ராஜா(30) என்பதும், மற்றொருவர் அவரது நண்பரான துலுக்கானம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். துலுக்கானத்தை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜா மீது காவல் நிலையத்தில் ரவுடிசம் செய்து கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் செய்யாறில் ரவுடிபோல் இவர் உலா வருவதும் தெரியவந்தது.

Related Stories: