பெரம்பூர்: சென்னை மற்றும் புறநகரில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக, போலீசார் 15 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தொடர்ந்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன.
அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து சுமார் 200 கிராம் மதிப்புள்ள 30 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்த மதன் குமார் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரம்பூர் ராஜாஜி தெருவைச் சேர்ந்த சஜித் என்கின்ற மண்ட சஜித் (25), கார்த்திக் என்கின்ற கமல் கார்த்திக் (26) என மேலும் இருவரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதன்குமார் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மற்றொரு வழக்கில் சிறையில் இருந்த போது காசிமேட்டை சேர்ந்த ஜெகன் மற்றும் வினோத் ஆகியோர் பழக்கமாகி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களை பெரம்பூர் பகுதியில் பார்த்து அவர்களிடம் இருந்து 6000 ரூபாய் கொடுத்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி, அதனை ஓட்டேரி பகுதியில் மதன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பிடிபட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோன்று கொடுங்கையூர் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொடுங்கையூர் எழில் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கின்ற கஞ்சா மணி (25) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அம்பத்தூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் காவல் சரகத்தில், உதவி கமிஷனர் குமார் தலைமையில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை தொடர்பான சிறப்பு சோதனை நேற்று அதிகாலை நடந்தது. அதன்படி, கள்ளிக்குப்பம், மதுரைவீரன் கோயில் தெரு, ஏரிக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வபாலாஜி (22), நாவரசு (20), ராஜா (23), ஹேமபிரியன் (18) மற்றும் சந்தோஷ் (20) ஆகிய 5 பேரை புதூர் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் மேனாம்பேடு, கருக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் கஞ்சா கடத்தி வந்த காந்த் (21) மற்றும் டில்லிபாபு (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், கொரட்டூர், ரெட்டி தெருவில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அரவிந்த் (30) மற்றும் மகாவிஷ்ணு (21) ஆகிய இருவரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, போலீசார் கைதான 8 பேரிடம் இருந்தும் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோல, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையில் உள்ள தனியார் கூரியர் நிலையத்திற்கு மருத்துவமனையின் பெயரில் சந்தேகத்திற்கிடமான ஒரு பார்சல் வந்திருப்பதாக தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பார்சலை வாங்குவதற்காக வந்த குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த லீ என்பவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பார்சலில் அரசால் தடை செய்யப்பட்ட 1,100 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், சிங்கப்பெருமாள்கோவில் காவல் நிலைய போலீசார், காசிமேடு காவல் நிலையத்தின் ‘பி’ பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செந்தில் (எ) தாடி செந்தில் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தாம்பரம் மாநகர காவல்துறை, நகரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இத்தகைய தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்கவும், நகரின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தவும் காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகரில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
