ரூ.3 லட்சத்தை சிறுமி கையில் வழங்கி பச்சிளம் பெண் குழந்தை கடத்தல்

காரைக்குடி: காரைக்குடியில் பெண் குழந்தையை நூதன முறையில் கடத்திய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமடைந்ததால், கடந்த மே 26ம் தேதி காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 4வதாக பெண் குழந்தை பிறந்தது.

அதே மருத்துவமனையில் மற்றொரு கர்ப்பிணிக்கு உதவியாக இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிரவசமான பெண்ணின் ஏழ்மை நிலையை அறிந்து, ‘4வது குழந்தையை வேறு யாரிடமாவது வளர்க்க கொடுத்து விடலாமா’ என கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் கடந்த ஜூன் 4ம் தேதி, அப்பெண் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பின்னர் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, செல்போன் மூலம் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். தங்களுக்கு குழந்தையை விலைக்கு தருமாறு வற்புறுத்தி உள்ளனர். இதற்கும் பெண் மறுத்து விட்டார். இதையடுத்து, நேரில் வந்த அத்தம்பதியினர் குழந்தையை மீண்டும் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும், நேற்று முன்தினம் இரவு பெண்ணின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத 3 பெண்கள் உள்ளே வந்துள்ளனர்.

இவர்கள் அங்கிருந்த 10 வயதான மூத்த மகளிடம் ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொடுத்து விட்டு பச்சிளங்குழந்தையை கட்டாயப்படுத்தி வாங்கி சென்று விட்டனர். இதுகுறித்து அப்பெண், காரைக்குடி ஏஎஸ்பி ஆஷிஸ் புனியாவிடம் நேற்று காலை அளித்த புகாரில், ‘‘எனது மூத்த மகளிடம் ரூ.3 லட்சம் கொடுத்து பெயர் தெரியாத 3 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் குழந்தையை பெற்று சென்றனர்’’ என புகார் அளித்தார்.

அவரது உத்தரவின்பேரில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, பெண் அளித்த செல்போன் எண் மூலம் அக்கும்பலின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். குழந்தையுடன் சென்ற 4 பேரும், ராமநாதபுரத்தில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், புகார் அளித்த 5 மணிநேரத்தில் பிறந்து 45 நாட்கள் ஆன குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை வாங்கிச் சென்ற 4 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: