கிருஷ்ணகிரி, ஜூலை 8: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மருத்துவ வசதிக்காக 21 கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளதால், தரம் உயர்த்த வேண்டியது அவசியம் என கருதப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சி அந்தஸ்தில் உள்ள நகரமாகும். இங்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் மருந்து துறை சார்பில், அரசு சமுதாய உடல் நல மையம் இயங்கி வருகிறது. 24 மணி நேர அவசர சிகிச்சை மையமாகவும், பிரசவ சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வந்தன. காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 36 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு சிகிச்சைகளுக்காக இங்கு வந்து செல்கிறார்கள். காவேரிப்பட்டணம் சுற்று வட்டாரத்தில், நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் இயற்கைக்கு மாறான இறப்புகள் ஆன உடல்கள் இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, போலுப்பள்ளியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்ட பிறகு, காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல் நல மையம் தரம் இறக்கப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார மையமாக மாற்றப்பட்டு விட்டது.
ஆனாலும், பல்வேறு நோய்களுக்காக இந்த மருத்துவமனைக்கு 500க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கிறார்கள். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இதனால், விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் மட்டுமே இங்கு வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல், காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அறுவை சிகிச்சை அரங்கமும் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக இங்குள்ள பிரேத பரிசோதனை அறை செயல்படாமல் உள்ளது. இதனால், காவேரிப்பட்டணம் மற்றும் 36 ஊராட்சிகளில் விபத்துகளில் இறப்பவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கே கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்து தரப்படுகின்றன. எனவே காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: காவேரிப்பட்டணம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி கூடுதல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அதே போல பிரேத பரிசோதனை இங்கேயே நடைபெற வேண்டும். விபத்து காலங்களில் முதலுதவி மட்டுமே இங்கு வழங்கப்படுகிறது. கூடுதல் சிகிச்சைகள் அளிக்கும் வகையில், மருத்துவமனையின் தரத்தை உயர்த்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
