ராயக்கோட்டை, ஜூன் 29: வார விடுமுறை நாளான நேற்று, பெங்களூரு, ஓசூர், தர்மபுரி பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பணிகள், குடும்பத்துடன் ராயக்கோட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையில் குவிந்தனர். அவர்கள் குளித்து மகிழ்ந்தும், ஆற்றின் நடுவே உள்ள சிவலிங்கத்தை தரித்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே செல்லும் தென்பெண்ணை ஆற்றின் நடுவே சிவன் கோயில் உள்ளது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், பிரதோஷம் ஆகிய நாட்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் டூவீலர்களில் ராயக்கோட்டை தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் வந்து நீராடிவிட்டு, இங்குள்ள சிவலிங்கத்தை தரிசித்து செல்வது வழக்கம்.
வார விடுமுறை நாளான நேற்று கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் ராயக்கோட்டை அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றிற்கு வந்தனர். காலை முதலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் தென்பெண்ணை ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், ஆற்றின் மத்தியில் உள்ள கோயிலுக்கு சென்று சிவலிங்கத்தை தரிசித்தனர். தொடர்ந்து ஆற்றங்கரையில் அமர்ந்து தாங்கள் கொண்டுவந்த உணவு, தின்பண்டங்ளை சாப்பிட்டனர். தென்பெண்ணை ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இங்கு பெரும்பாலும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
