திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் வழக்கமான சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெளிநாடு செல்வதற்காக வந்த 20 பெண்களின் விசாவை சோதனை செய்தனர். ஆனால் அந்த விசாக்கள் போலி என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஏஜென்ட் ஒருவர் போலி விசாக்களை கொடுதது வெளிநாடு செல்ல அனுப்பி வைத்ததும் தெரிந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான 20 பெண்களும் ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட் செல்வதற்காக ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு வழக்கமான சோதனைகளை நடத்தியபோது அவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் போலியானவை என்பது தெரிந்தது. இவர்களுக்கு போலி விசா ஏற்பாடு செய்து கொடுத்த ஏஜெண்ட் யார்? என விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.
