ஒன்றிய அரசு திடீர் நடவடிக்கை ரூ.1,800க்கு மேல் இனி விரும்பினால் மட்டுமே பிஎப் பிடித்தம்: இபிஎப் திட்டத்தில் மாற்றம்: ஊழியர்களுக்கு பாதிப்பு

புதுடெல்லி: பிஎப் பிடித்தம் ரூ.1800க்கு மேல் இனி விரும்பினால் மட்டுமே தொடரக் கூடிய வகையில் புதிய இபிஎப் திட்டத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026-ஐ அரசிதழில் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் ஊழியர்களுக்கு பாதகமான முக்கிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, மாத ஊதியத்தின் அடிப்படையில், ஊழியரும் நிறுவனமும் தங்களுக்குள் ஒப்புதல் இருந்தால் ரூ.15,000 என்ற ஊதிய வரம்பைத் தாண்டியும் முழு சம்பளத்தின் மீது 12 சதவீத இபிஎப் பங்களிப்பைச் செலுத்தி வந்தனர். இதனால், பல ஊழியர்களின் மாதாந்திர பிஎப் பிடித்தம் ரூ.1,800-ஐ விட அதிகமாக இருந்தது. தற்போதைய புதிய திட்டத்தின் கீழ், ரூ.15,000 ஊதிய வரம்பின் அடிப்படையில் கணக்கிடப்படும் ரூ.1,800-க்கு மேற்பட்ட இபிஎப் பங்களிப்பு இனி கட்டாயமல்ல. அது ஊழியர் மற்றும் நிறுவனத்தின் விருப்பத்தின் பேரில் மட்டுமே தொடரும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, ரூ.50,000, ரூ.1 லட்சம் சம்பளத்தின் அடிப்படையில் பிஎப் செலுத்த விரும்பினால் இனி அது விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்குமே தவிர கட்டாயமல்ல. இதன் மூலம், பிஎப் பிடித்தத்தை ரூ.1,800க்குள் கட்டுப்படுத்துவதால், ஊழியர்கள் கையில் பெறும் சம்பளம் அதிகரிக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் சேமிப்பு குறைவதோடு, நிறுவனங்கள் செலுத்தும் பிஎப் தொகையும் இதனால் குறையும். இது ஊழியர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

Related Stories: