மணிப்பூரில் வீடுகள் எரிக்கப்பட்ட விவகாரம் பிரதமரின் பிரித்தாளும் கொள்கையின் விளைவு: ராகுல்காந்தி ஆவேசம்

புதுடெல்லி: மணிப்பூரில் வீடுகள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார். மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் குறைந்தது இரண்டு பழங்குடியின கிராமங்களில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சுமார் 20 வீடுகளை தீயிட்டு எரித்துள்ளனர். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘மணிப்பூர் பல ஆண்டுகளாக தீப்பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறைத் தீயில் மீண்டும் 20 வீடுகள் சாம்பலாகிவிட்டது.

இரண்டு அரசுகள் மற்றும் குடியரசு தலைவர் ஆட்சி இருந்தபோதிலும், மோதல் தீவிரமடைந்து வருகின்றது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற குடும்பங்கள் சிதைந்துள்ளன. மணிப்பூர் அனுபவிக்கும் தாங்கமுடியாத வேதனையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மதம், சாதி, மொழி, பிராந்தியம் மற்றும் அடையாளம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிரிக்கும் மோடி அரசின் பிளவுபடுத்தும் கொள்கையின் விளைவுதான் இது. இன்று மணிப்பூர் மட்டுமல்ல.

ஒட்டுமொத்த நாடும் பிரதமரிடம் இருந்து எந்த நடவடிக்கையையும் எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு குறைந்தபட்சம் இரண்டு வார்த்தை அனுதாபத்தையாவது வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையையும் இழந்துவிட்டது. மணிப்பூர் சிறந்த நிலையை அடைவதற்கு தகுதியானது. அதற்காக இந்தியாவை ஒன்றிணைப்பதே ஒரே வழியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: