திருமலை: சென்னை உட்பட நாடு முழுவதும் பல முக்கிய மாநகரங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மற்றும் கூரியர் மூலம் கஞ்சா சப்ளை செய்த வடமாநில கும்பல் பிடிபட்டது. நாடு முழுவதும் ஸ்பீட் போஸ்ட் மூலம் கஞ்சா விநியோகித்து வந்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டி: ஐதராபாத் அருகே உள்ள எஸ்.ஆர்.நகர் மற்றும் குடிமல்காபூர் காவல் நிலைய எல்லைகளில் வந்த பார்சல் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
ஐதராபாத் வந்தடைந்த 2 பார்சல்களும் விமானத்தில் ஸ்பீட் போஸ்ட் மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து நடத்திய தீவிர விசாரணையில் ஜார்க்கண்டை சேர்ந்த சத்யம் மிஸ்ரா என்பவர் கடந்த 2018ம் ஆண்டு அதேபகுதியை சேர்ந்த மிஸ்ரா, ராகுல்ஜெய், சச்சின் மிஸ்ரா மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா சப்ளை தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் பெயிண்டராக பணிபுரிந்த சத்யம் மிஸ்ரா, பின்னர் டிரைவராக பணியில் சேர்ந்தார்.
ஸ்பீட் போஸ்ட் மற்றும் கூரியர் சேவைகளை பயன்படுத்தி நாடு முழுவதும் சுமார் 21 மாநிலங்களுக்கு கஞ்சா விநியோகித்து வந்துள்ளனர். குறிப்பாக ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தனர். நாடுமுழுவதும் தினசரி 100 ஆர்டர்கள் வரை பெற்று அவற்றில் 8 முதல் 10 கஞ்சா பார்சல்கள் ஸ்பீடு போஸ்ட் மூலம் சப்ளை செய்து வந்தனர்.
ஒவ்வொரு பார்சலிலும் 50 முதல் 250 கிராம் வரை கஞ்சா பொட்டலங்களை அனுப்பி உள்ளனர். அவற்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.8,000 வரை கட்டணம் நிர்ணயித்து விற்றுள்ளனர். இதன்மூலம் தினசரி ரூ.1 லட்சம் வரை சம்பாதித்து வந்துள்ளனர். இவர்களது மாதாந்திர வருவாய் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலும், வருடாந்திர வருவாய் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு கூறினார்.
