புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் நடந்த மெகா ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் நடந்த மோசடி விவகாரம் வெளியே தெரிய வந்ததால் உபி அரசு 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. அந்த விசாரணைக்குழுவின் முதற்கட்ட அறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் வீடுகளில் 2 முறை நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை இப்போது எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. அயோத்தி நன்கொடை மோசடி தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீதி மற்றும் அறத்தின் வடிவமாகத் திகழும் பகவான் ராமர் மீதான ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக, சாதாரண மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை நன்கொடையாக அளித்தனர். ஆனால், அந்தப் பணம் வெட்கக்கேடான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது; இது கோடிக்கணக்கான மக்களால் புனிதமாகக் கருதப்படும் இடத்தின் புனிதத்தன்மையையே சிதைப்பதாகும். ஆரம்பகட்ட விசாரணைகள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கண்முன்னேயே மிகவும் திட்டமிட்ட முறையில் ஒரு மோசடிக் கும்பல் செயல்பட்டு வந்ததை வெளிப்படுத்தியுள்ளன.
எனவே உபி அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் முதல் தகவல் அறிக்கை ஆகியவை வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே தெரிகின்றன. எனவே 140 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்திய உச்ச நீதிமன்றத்தின் கடுமையான மேற்பார்வையின் கீழ், உயர்மட்ட சுதந்திரமான அமைப்பைக் கொண்டு சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட்: ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்து சிஏஜி ணிக்கை மற்றும் முறைகேடு புகார்கள் மீது நீதி விசாரணை நடத்தக் கோரி, சிபிஐ மாநிலங்களவை உறுப்பினர் பி. சந்தோஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கெஜ்ரிவால்: அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் வெறும் கருவிகளாக செயல்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய செல்வாக்கு மிக்க நபர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கோரியுள்ளார்.
அவர் கூறுகையில்,’ ராமர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பிரதமரால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்தத் திருட்டைத் தடுக்க பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. பிரதமர் யாரைக் காப்பாற்றுகிறார், ஏன் காப்பாற்றுகிறார்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
* அறக்கட்டளை நிர்வாகிகள் மீது வழக்குப்பதிய வக்கீல்கள் மனு
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நிலையில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, கோயில் அதிகாரி கோபால் ராவ் ஆகியோர் மீது எப்ஐஆர் பதிய கோரி பைசாபாத் வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணியை நடத்தினர். மேலும் போலீசில் புகார் அளித்தனர்.
* சம்பத் ராய் நில அபகரிப்பு புகார்
அயோத்தியில் உள்ள ராம் மந்திர் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ராம் நிவாஸ் கோயிலின் நிர்வாகி ஹரிசங்கர் சபரிவாலா, ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை’யின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சம்பத் ராயும் அவரது கூட்டாளிகளும் போலி ஆவணங்கள் மூலம் கோயிலின் ரூ.50 கோடி நிலத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாகவும், இது குறித்த தனது புகார்களை அதிகாரிகள் புறக்கணித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
