குடிநீருக்காக திறந்த தண்ணீர் ஆலைகளுக்கு விநியோகம் அமராவதி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

*தேசிய நெடுஞ்சாலையில் படுத்து மறியல்

உடுமலை : அமராவதி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரை ஆலைகள் பயன்படுத்த திருப்பி விட்டதை கண்டித்து, விவசாயிகள் கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் படுத்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி ஆற்று வழியாக பழைய ஆயக்கட்டுக்கும், பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை போதிய அளவில் பெய்யாததால் மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் அதைச் சுற்றி உள்ள கிராமப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், விவசாயிகள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கரையோர கிராமப் புறங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை கடத்தூர் ராஜவாய்க்கால் வழியாக முறைகேடாக எடுத்து சென்று தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், விவசாயிகள் நேற்று காலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது, உரிய அனுமதி இல்லாமல் முறைகேடாக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், ஆவேசமடைந்த விவசாயிகள் கடத்தூர் ராஜவாய்க்கால் தண்ணீருக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இதனால் அங்கிருந்து கிளம்பி மடத்துக்குளம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

விதிகளை மீறி, அரசாணை எதுவும் இல்லாமல் முறைகேடாக கடத்தூர் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா செயலாளர் வீரப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: