புதுடெல்லி: ஒரு வார கால தற்காலிக தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் டெலிகிராம் செயலி நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியது. நீட் நுழைவுத்தேர்வு தொடர்பான கசிந்த மற்றும் போலியான வினாத்தாள்கள் பரவுவதை தடுக்கத் தவறியது, தவறான தகவல்களை பரப்பியது மற்றும் நீட் நுழைவுத்தேர்வு செயல்முறை தொடர்பான மோசடி நடவடிக்கைகளை தடுக்காதது ஆகிய காரணங்களுக்காக டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22ம் தேதி வரை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்திருந்தது.
நீட் மறுதேர்வு நடப்பதையொட்டி விதிக்கப்பட்டிருந்த இந்த தற்காலிக தடை முடிந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் இந்தியாவில் டெலிகிராம் செயலி செயல்படத் தொடங்கியது. கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் டெலிகிராம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கூகுள் அதிகாரப்பூர்வகமாக பதிவிறக்க வசதியை கொண்டு வரும் முன்பே, நேற்று அதிகாலையிலேயே டெலிகிராம் செயலியை பயனர்களால் பயன்படுத்த முடிந்தது. அதே சமயம் ஆப்பிள் ஸ்டோரில் நேற்று பிற்பகல் 12 மணி வரையிலும் டெலிகிராம் செயலி மீண்டும் கொண்டு வரப்படவில்லை.
தாமதத்திற்கான காரணத்தையும் ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனாலும், ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் ஏற்கனவே உள்ள டெலிகிராம் பயனர்களால் அதன் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடிந்தது. ஒன்றிய அரசின் மற்றொரு உத்தரவுப்படி, டெலிகிராம் செயலியில் உள்ள செய்திகளை திருத்தும் வசதி வரும் 30ம் தேதி வரையிலும் முடக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
