இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அதாவது கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. இதனால் இதனால் பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த நடவடிக்கைக்கு எதிராக விவசாய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் தற்போது இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சம்யுக்த கிசான் மோர்ச்சா அதாவது விவசாயம் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தடையற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஆலோசனையை தொடங்கிவிட்டது. இரு நாட்களில் இந்த ஒப்பந்தம் இறுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே நாடாளுமன்றத்திலும் இந்திய விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியா முழுவதும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்வது அனுமதிக்க முடியாது. ஏனெனில் இந்த நடவடிக்கைக்கு இசைவு கொடுத்தால் இந்திய உற்பத்தி பொருட்களை சந்தை படுத்த முடியாத சூழல் ஏற்படும். விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு அம்சங்களும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற செய்யக் கூடாது என்பதை என்பதை போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக உலகளாவிய முதலாளிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் அனுமதி வழங்க கூடாது. குறிப்பாக இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்யப்படுவதற்கு முன்னதாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்றார்.

Related Stories: