புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் இருந்து ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை எம்பி பதவி மறுக்கப்பட்டதால் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய பாஜ அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சராக இருந்த ஜார்ஜ் குரியனின் பதவிக்காலம் கடந்த 21ம் தேதியுடன் நிறைவடைந்தது.
சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தல்களில் அவருக்கு மீண்டும் போட்டியிட பாஜ தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து, நேற்று ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மோடியின் பரிந்துரை அடிப்படையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முறைப்படி ஏற்றுக்கொண்டார். ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான கிறிஸ்தவ முகமான ஜார்ஜ் குரியன் விலகல், பாஜ அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்பியாக இல்லாத ஒருவர் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் அமைச்சராக நீடிக்க முடியாது என்ற விதியின் அடிப்படையிலும், மீண்டும் எம்.பி., ஆகும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதனால் இவர் கவனித்து வந்த சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு போன்ற முக்கிய துறைகள் தற்போது காலியாகியுள்ளது.
இதே போல் ஜூன் 21ஆம் தேதியுடன் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த ரயில்வே துறைக்கான ஒன்றிய இணையமைச்சர் ரவ்னீத் சிங்கையும், மாநிலங்களவை எம்பி பதவிக்கு மீண்டும் போட்டியிட பாஜ வாய்ப்பளிக்கவில்லை. 2024 ஆகஸ்ட் மாதம் முதல் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ரவ்னீத் சிங், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் இணையமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
சமீபகாலமாக, சில ஒன்றிய அமைச்சர்களுக்கு அவர்களின் சொந்த மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கிய அமைப்பு ரீதியான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த மே 28 அன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கான இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா டெல்லி பாஜ தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான ஒன்றிய இணையமைச்சராகவும் உள்ளார். நிதித் துறைக்கான இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த ஆண்டு டிசம்பரில் பாஜவின் உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். எனவே மிக விரைவில் அமைச்சரவை மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
* ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் மோடி
ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சுக்களுக்கு மத்தியில், பிரதமர் மோடி ேநற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்களை ஜனாதிபதி மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பத்ம விருதுகள் வழங்கும் விழா முடிந்த சிறிது நேரத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தேசியத் தலைநகரில் உள்ள அரசியல் வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
