நடிகர்கள் மம்மூட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் திரவுபதி முர்மு: டெல்லி ஜனாதிபதி மாளிகையில் விழா

புதுடெல்லி: நடிகர் மம்மூட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி வருகிறது. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கடந்த மே 25ஆம் தேதி முதற்கட்டமாக 65 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் 2 பத்ம விபூஷண், 7 பத்ம பூஷண் உள்பட மொத்தம் 65 பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

பத்ம பூஷண்: மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரனுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி ரிபு சோரன் பெற்றுக் கொண்டார். மேலும் நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், ஈரோட்டை சேர்ந்த எஸ்.கே.எம்.மயிலானந்தன் மற்றும் அல்கா யக்நிக் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

பத்மஸ்ரீ: சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு, அறிவியல் தொழில்நுட்ப பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதைப்போல் சேலத்தை சேர்ந்த சிற்பக்கலைஞர் ராஜா ஸ்தபதி, தமிழ்நாட்டை சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், அரங்க வடிவமைப்பாளர் நூருதீன் அஹமது, வேளாண் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ராமசாமிக்கு அறிவியல் தொழில்நுட்ப பிரிவிலும், நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, கர்நாடக இசைக்கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

பத்ம விபூஷண்: பி.நாராயணன் (கலை மற்றும் கல்வி), உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேடி தாமஸ் ஆகியோர் பத்ம விபூஷண் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். மொத்தம் 65 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: