வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது: டெல்லியில் 2 நாள் நடக்கிறது

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்கள் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டில் 50 சதவீத வரி விதித்த நிலையில் கடந்த பிப்ரவரியில் 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. டிரம்ப் விதித்த இந்த பரஸ்பர வரி விதிப்பில் அதிபருக்கான அதிகாரங்கள் மீறப்பட்டதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, உலகளாவிய வர்த்தக பங்காளிகள் மீது 10 சதவீத வரியை டிரம்ப் நிர்வாகம் விதித்தது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான 2 நாள் உயர்மட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், இந்தியாவுக்கான அமெரிக்கதூதர் செர்ஜியோ கோர் ஆகியோர் பங்கேற்கின்றனர். கடந்த 17ம் தேதி பிரான்சில் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இடையேயான சந்திப்பை தொடர்ந்து, கிரீர் 2 நாள் பயணமாக டெல்லி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக அமைச்சகத்தின் தலைமையகமான வாணிஜ்ய பவனில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், இந்தியா தரப்பில் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால், தலைமைப் பேச்சுவார்த்தையாளர் தர்பன் ஜெயின் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் (ஜூன் 2-4) டெல்லியில் நடைபெற்ற தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மட்டத்திலான சந்திப்பை தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் ஜூலை 24ம் தேதிக்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பினரும் முயல்வதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்தித்த ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

Related Stories: