ஏஐ மூலம் தயாரித்த போலி நீட் வினாத்தாள் விற்ற சட்ட மாணவர்: மபியில் கைது

இந்தூர்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலி நீட் வினாத்தாள் தயாரித்து விற்பனை செய்த சட்ட மாணவரை மபி போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் நீட் மறுதேர்வு கடந்த 21ம் தேதி நடந்து முடிந்தது. ஏற்கனவே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டு நீட் மறுதேர்வு நடத்தப்படுவதால் இம்முறை குற்றச்சாட்டுகள் எதுவும் எழாதவாறு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் கனடியா பகுதியைச் சேர்ந்த அக்ஷய் மால்வியா என்ற சட்டக் கல்லூரி மாணவர், ஏஐ மூலம் போலியான நீட் வினாத்தாள் தயாரித்து விற்றதாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துணை ஆணையர் ராஜேஷ் குமார் திரிபாதி கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட மாணவன் சாட்ஜிபிடி பயன்படுத்தி போலியான நீட் வினாத்தாள் தயாரித்துள்ளார்.

பின்னர் தன்னிடம் நீட் வினாத்தாள் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் விற்பனை செய்துள்ளார். சுமார் 25 பேரிடம் ரூ.100, ரூ.200 பெற்றுக் கொண்டு போலி வினாத்தாளை அனுப்பி உள்ளார். அவர் தயாரித்த வினாத்தாள், அசல் நீட் வினாத்தாளுடன் எந்த விதத்திலும் ஒத்துப் போகவில்லை. போலி வினாத்தாளை அவர் மேலும் பலருக்கு விற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’’ என்றார்.

Related Stories: