ஒவ்வொரு அரசு ஆவணமும் மக்களின் விருப்பம், கவலைகள் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது: இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘ஒவ்வொரு கோப்புகளும் எண்ணற்ற மக்களின் விருப்பங்கள், கவலைகள் மற்றும் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன’ என இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார். ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, ஐஏஎஸ்-2024 பேட்சை சேர்ந்த, 183 பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: முக்கிய சவால்களை தனித்தனியாக தீர்க்க முடியாது.

அர்த்தமுள்ள, நீடித்த முடிவுகளை அடைவதற்கு துறைகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு அவசியம். உன்னிப்பாக கவனித்தல், புதுமை, மக்களை மையமாக கொண்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் தேசத்தை கட்டியெழுப்புவதில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளாகிய நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கோப்புகளுக்கு பின்னாலும் உள்ள மனிதாபிமான தாக்கத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கோப்பும் எண்ணற்ற மக்களின் விருப்பங்கள், கவலைகள், வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. மக்களே தெய்வம் என்ற தாரக மந்திரத்தின்படி, ஒவ்வொரு முடிவிலும் மக்களை மையமாக கொள்ள வேண்டும். அரசு நிர்வாகமானது உணர்வுப்பூர்வமானதாகவும் விரைவாக பதிலளிப்பதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: