மலைக்கோட்டையிலிருந்து 400 அடி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு வருங்கால கணவரை கொன்ற இளம்பெண்: காதலனுடன் கைது

புனே: திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காதலுக்கு தடையாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த இளம்பெண், காதலனுடன் போலீசில் சிக்கினார். புனே மாவட்டத்தின் ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநருமான கேத்தன் அகர்வால் (26). கடந்த 18ம் தேதி லோககாட் கோட்டைக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்த லோனவாலா போலீசார், அவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கோட்டையில் பலத்த காற்று வீசிய நேரத்தில், போட்டோ எடுக்க முயன்ற கேத்தன் அகர்வால், 400 அடி ஆழமுடைய பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததாக கோயல் கூறியிருந்தார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கேத்தன் அகர்வால்- சியா கோயலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் நடக்கவிருந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனபோதும் கேத்தன் மரணம் சந்தேகத்திற்குரியதாக தோன்றியதால், வழக்கை முழுமையாக விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன்பேரில் நிதித் தகராறுகள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தனர். அப்போது புனேவின் கோண்ட்வாவைச் சேர்ந்த சேத்தன் பாபுலால் சவுத்ரி(22) என்ற நபருடன் சியா கோயல் உறவில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் சியா கோயலுக்கு கேத்தனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றும், சவுத்ரியுடனான காதல் உறவுக்கு கேத்தன் தடையாக இருப்பதாக கருதிய கோயல், அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோயல் அவரைச் சுற்றுலா என்ற பெயரில் லோககாட் கோட்டைக்கு அழைத்துச் சென்றார். சவுத்ரி பின்னர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். இருவரும் சேர்ந்து கேத்தன் அகர்வாலை கோட்டையிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் சவுத்ரியை காவலில் எடுத்து விசாரித்த போது, இருவரும் சேர்ந்து கேத்தனை கொலை செய்ய திட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்தது. எனவே கோயலையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கேத்தனின் தந்தை அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட 2 பேர் மீது கொலை மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவங்களின் துல்லியமான வரிசையை உறுதிப்படுத்தவும், தடயவியல் ஆதாரங்களைச் சேகரிக்கவும், இந்தக் குற்றச் சதியில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறியவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: