பருவமழை பற்றாக்குறையால் காரீப் பருவ விதைப்பு பாதிப்பு: 111 மாவட்டங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: பருவமழை நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அளித்த பேட்டியில் கூறியதாவது: எல் நினோ தாக்கத்தால் பருவமழையில் 43 சதவீத பற்றாக்குறை உள்ளது. ஜூலை 2 வரை இந்த பலவீனமான நிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் காரீப் பயிர்கள் பாதிக்கப்படக் கூடும். விவசாயிகளுக்கு காரீப் பயிர்களை விதைக்க மிகக் குறைந்த காலமே இருக்கிறது.

ஜூன் 22 நிலவரப்படி காரீப் பயிர் விதைப்பு மொத்த விதைப்பு பரப்பளவில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளது. ஆனாலும் சோயாபீன்ஸ் தவிர மற்ற பெரும்பாலான பயிர்களின் விதைப்பு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட அதிகமாக 11.99 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 315 மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு இருக்கக்கூடும்.

இவற்றில் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர்ப்பாசன வசதி கொண்ட 111 மாவட்டங்கள் மிக அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த மழைப்பொழிவு நிலைக்கு ஏற்ற மாற்றுப் பயிர்களைப் பரிந்துரைக்கும் வகையில், மாநில வாரியான அவசரகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. குறைந்த நீர் தேவைப்படும் பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை ஊக்குவிக்குமாறும், ஒரே பயிருக்குப் பதிலாக குறுகிய கால மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய விதை வகைகளைப் பயன்படுத்துமாறு விவசாயிகளை ஊக்குவிக்க மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: