பெரம்பூர்: தாய்மாமனை அடித்துக்கொலை செய்த மருமகனை கைது செய்தனர். குடிக்க மதுதர மறுத்ததால் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் 13வது பிளாக்கை சேர்ந்தவர் முருகன் (46). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு நிவேதா (19), யோகேஷ் (15) என்ற மகன், மகள் உள்ளனர். முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்துள்ளார். இதன்காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் மதுராந்தகத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மீனா சென்றுவிட்டார். இதனால் முருகன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் தான் வசித்து வந்த வீட்டை லீசுக்கு விட்டுவிட்டு ஆட்டோவில் தங்கி வசித்துவந்துள்ளார். மேலும் அடிக்கடி வியாசர்பாடி ஏரிக்கரை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனது அக்கா மாலா வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில், மாலாவின் மகன் பவித்ரன் தாய்மாமன் முருகனை பார்ப்பதற்காக புளியந்தோப்பு கேபி பார்க் பகுதிக்கு வந்தபோது முருகன் குடிபோதையில் இருந்துள்ளார். மேலும் ஆட்டோவில் மதுபானம் வைத்திருந்துள்ளார். இதை பார்த்ததும் பவித்ரன் தனக்கும் மது வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு முருகன், ‘’தன்னிடம் சரக்கு குறைவாக உள்ளது, எனவே மது தரமுடியாது’’ என்று கூறியதால் கோபம் அடைந்த பவித்ரன் ஆட்டோவில் அமர்ந்திருந்த முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் முருகனுக்கு முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று தனது தாயிடம், ‘’மாமாவை யாரோ அடித்துவிட்டார்கள்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவந்தனர். நேற்று காலை முருகனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு மாலை 5 மணி அளவில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாலா கொடுத்த புகாரில், ‘’தனது தம்பி முருகனை அடித்து கொலை செய்துவிட்டனர்’ என்று தெரிவித்துள்ளார். இதன்படி, பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், பவித்ரன்தான் முருகனை ஆட்டோவில் வைத்து அடித்து இழுத்துச்சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து இன்று காலை பவித்ரன் (32) கைது செய்தனர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி புவனேஸ்வரி உள்ளார். பவித்ரன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைவிட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்பது தெரிந்தது. இதனிடையே, கொலை வழக்குபதிவு செய்து பவித்ரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
