பாலக்காடு : பாலக்காடு- திருச்சூர் மாவட்ட எல்லை பகுதியான வடக்கஞ்சேரி அருகே பணியங்கரா சுங்கச்சாவடியில் சொகுசு பஸ்களில் உயர்ரக போதைப்பொருள் கடத்தி வந்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்பி அப்துல்ராஷிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வடக்கஞ்சேரி காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எபி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரூவில் இருந்து கேரள மாநிலம், திருச்சூர் நோக்கி வந்த 2 சொகுசு பஸ்களில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் வந்து இறங்கினார். பின்னர் இருவரும் வெவ்வேறு பஸ்களில் கோட்டயம் செல்ல முயன்றனர்.
போலீசார் 2 பேரையும் தடுத்து நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது இருவரும் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மொத்தம் 46 கிராம் எம்டிஎம்ஏ உயர்ரக போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் கோட்டயம் மாவட்டம் பொன்குன்னம் புதுபரம்பிலை சேர்ந்த எலிசபெத் (25), ஈராற்றுப்பேட்டா அடுத்த அருவிச்சிராவை சேர்ந்த ஷாகுல் சுனீர் (29) என தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
