சுடுகாட்டில் நகையுடன் புதைக்கப்பட்ட வியாபாரி சடலத்தை தோண்டி 3 பவுன் செயின் திருடிய உறவினர்

 

கோவை: கோவை சவுரிபாளையம் உடையாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (60). மீன் வியாபாரி. இவர் உடல் நலக்குறைவால் கடந்த 6ம் தேதி இறந்தார். உறவினர்கள் சவுரிபாளையத்தில் உள்ள சுடுகாட்டில் நாகராஜ் உடலை அடக்கம் செய்தனர். அப்போது அவர் விரும்பி அணிந்திருந்த மீன் டாலருடன் கூடிய 3 பவுன் தங்க செயினையும் சேர்த்து புதைத்து விட்டனர். காரியம் செய்வதற்காக புதைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய கடந்த 19ம் தேதி நாகராஜ் மகன் வெங்கடேஷ் குமார் (32) மற்றும் உறவினர்கள் சுடுகாட்டுக்கு சென்றனர். அப்போது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மண் சிதறி சரியாக மூடாமல் இருந்தது.

மேலும் துர்நாற்றம் வீசியது. சுடுகாட்டை பராமரித்து வரும் கார்த்திகேயனிடம் விசாரித்தனர். முதலில் மழுப்பியவர் பின்னர், கடந்த 16ம் தேதி நாகராஜின் உறவினர் சக்திவேல்(35) மற்றும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன்(46) என்பவருடன் வந்து புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி நாகராஜின் கழுத்தில் கிடந்த தங்க செயினை எடுத்து ஆசிட் ஊற்றி கழுவி உருக்கி நகை கடையில் விற்பனை செய்ததும், அதில் ரூ.10 ஆயிரத்தை கார்த்திகேயனிடம் கொடுத்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வெங்கடேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், சக்திவேல்(35), மணிகண்டன்(46) மற்றும் உடந்தையாக இருந்த கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்ததோடு, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர். தகவல் அறிந்து ஊர் மக்கள் சிலர் மணிகண்டனை தனியாக அழைத்து சென்று தாக்கி உள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் பீளமேடு போலீசார் மணி, ரஞ்சித், கார்த்தி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: